Saturday, July 20, 2019

வெற்றிலை மாலை




இராமபிரான் இராவணனை போரில் வென்ற நற்செய்தியை அனுமன் அசோக வனத்தில் உள்ள சீதையிடம் தெரிவித்தார். அந்த இனிய செய்தியை கொண்டு வந்த அனுமனை கௌரவிக்கும் வகையில் சீதா பிராட்டி அருகில் இருந்த வெற்றிலை கொடியை பறித்து அனுமனுக்கு மாலையாக அணிவித்தார். 


எனவேதான் நினைத்த காரியம் வெற்றி பெற அனுமனுக்கு உகந்த சனிக்கிழமை அன்று அவருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வேண்டிக் கொள்கின்றனர்.



வெற்றிலை மாலை கட்டும் முறை


இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் கொட்டை பாக்கை வைத்து நான்காக மடித்து பூ தொடுப்பது போல கட்டுவதே பாரம்பரிய முறை.

சிலர் வெற்றிலையை சுருட்டி மாலையாக தொடுப்பார்கள். சிலர் வெற்றிலையை மடிக்காமல் நீளமாக கோர்த்து விடுவார்கள்.

வெற்றிலையை பீடா போல முக்கோணமாக மடித்து புகைப்படத்தில் உள்ளது போல் கோர்த்தும் மாலைகட்டுவார்கள். இடை இடையே பூக்களை சேர்த்துக் கொண்டால் இன்னும் அழகாக இருக்கும்.




வெற்றிலை மாலை கோயில்களில் உள்ள தெய்வ சிலைகளுக்கு மட்டுமே சார்த்தப் படுகிறது. வீட்டில் உள்ள சுவாமி படங்களும் சார்த்தப் படுவதில்லை.


பொதுவாக வெற்றிலை மாலை ஆஞ்சநேயருக்கு தான் அணிவிப்பார்கள். ஆனால் கல்வியில் சிறந்து விளங்க தல்லாகுளம் இரட்டை விநாயகருக்கு வெற்றிலை மாலை அணிவிக்கும் வழக்கம் உள்ளது.

அது மட்டுமல்ல செவ்வாய் கிழமை தோறும் பிள்ளையாருக்கு வெற்றிலை மாலை சார்த்தி வேண்டிணால் கங்கண பாக்கியம் கிடைக்கும்.

Saturday, July 13, 2019

பாலிகை தெளித்தல், அங்குரார்பணம்





கோவில்களில் பிரம்மோற்சவத்திற்கு முன்பும் வீடுகளில் திருமணம் மற்றும் பூணூல் கல்யாணத்தின் போது பாலிகை தெளித்தல் என்ற சம்பிரதாயம் கடைப்பிடிக்க படுகிறது. இதை அங்குரார்பணம் என்றும் கூறுவர்.





பாலிகா என்றால் மண் கலசம் என்று பொருள். மண் கலசத்தில் விதைகளை முளைக்க விட்டு செய்ய படும் சம்பிரதாயம் என்பதால் இதற்கு பாலிகை தெளித்தல் என்று பெயர்.
அங்குர என்றால் முளை விட்ட விதை என்று பொருள். முளை விட்ட விதைகளை ஓடும் நீரில் அர்பணிப்பதால் இதற்கு அங்குரார்பணம் என்று பெயர்.

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்


திருமணத்திற்கு முன் தினம் பாலிகா திரவியம் எனப்படும் கருப்பு எள், கருப்பு உளுந்து, கடுகு, நெல், பச்சை பயறு ஆகிய ஐந்து தானியங்களை ஊற வைக்க வேண்டும்.


 மறுநாள் அதில் சிறிதளவு பால் சேர்க்க வேண்டும். சுப நிகழ்ச்சியின் கர்த்தா ஊறிய விதைகளை ஐந்து மண் கலசத்தில் போட்டு அதன் மீது மண் தூவி பஞ்ச கவ்யத்தை தெளிப்பார்.

திருமணம் என்றால் மாப்பிள்ளை வீட்டார் மற்றும் பெண் வீட்டார் இருவரும் தலா ஐந்து பாலிகைகள் ஏற்பாடு செய்வார்கள்.

திசைக்கு ஒன்றாக நான்கும் நடுவில் ஒரு மண் கலசமும் வைக்கப் படும். 
நடு பாலிகையில் பிரம்மாவையும், கிழக்கில் உள்ள பாலிகையில் இந்திரனையும், மேற்கில் உள்ள பாலிகையில் வருணனையும், தெற்கில் உள்ள பாலிகையில் யமனையும், வடக்கில் உள்ள பாலிகையில் சோமனையும் ஆவாஹணம் செய்வர்.




ஒற்றை படையில் சுமங்கலிப் பெண்கள் பால், நீர் கலந்த நீரை தெளிப்பர். பாலிகை தெளித்த பெண்களுக்கு தாம்பூலம் வழங்கப்படும்.


சுப நிகழ்ச்சி நல்ல படியாக நடக்க திக்பாலகர்களை வேண்டிக் கொள்ளும் சம்பிரதாயம் இது.

பாலிகை கரைத்தல்

இந்த பாலிகைகளை ஐந்து நாட்கள் வீட்டில் வைத்து விளக்கேற்றி நைவேத்தியம் படைத்து பூஜிக்க வேண்டும்.

சுபகார்யம் நடந்த ஐந்தாவது நாளில் பாலிகை கரைத்தல் என்ற சம்பிரதாயம் கடைப்பிடிக்க படுகிறது.

ஐந்து நாட்களில் விதைகள் நன்றாக முளைத்திருக்கும். இதை சுற்றி பெண்கள் பாட்டு பாடி கும்மி அடிப்பார்கள். பின்னர் முளைத்த விதைகளை ஓடும் நீரில் விடுவார்கள்.






நடைமுறையில் ஐந்து நாட்கள் பூஜை செய்ய இயலாததால் விழா நடந்த அன்றே பக்கெட் நீரில் பாலிகையை கரைத்து எறிந்து விடுகிறார்கள்.

பிரம்மோற்சவத்தில் பாலிகை தெளித்தல்.


கோவில்களில் பிரம்மோற்சவத்திற்கு முதல் நாள் சண்டிகேஸ்வரர் அருகிலுள்ள புற்றுக்கு சென்று மண் எடுத்து வருவார். இதை மிருத்சங்காஹணம் என்பர். இந்த புற்று மண்ணைக் கொண்டு பாலிகை தயார் செய்யப்படும்.

திருவாரூர் தியாகேசப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தின் போது சண்டிகேஸ்வரர் முருதம்பட்டிணம் அபிமுக்தீஸ்வரர் கோவிலுக்கு சென்று மண் எடுத்து வரும் நிகழ்வு மிகவும் பிரபலமானது.







Thursday, July 4, 2019

பகவானும் பாகற்காயும்



பாகற்காய் படையல்


திருவாரூர் தியாகேச பெருமாள், திருப்பெருந்துறை ஆவுடையார் கோயிலில் இறைவனுக்கு பாகற்காய் கறி நிவேதனம் செய்ய படுகிறது.

பாவக்காய் மண்டபம்


சித்திரை திருவிழாவின் பொழுது வில்லாபுரம் கிராமத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் இறைவனும் இறைவியும் எழுந்தருளி ஒரு நாள் முழுவதும் தங்குவார்கள். அப்போது இறைவனை மருந்தீசராக வழிபட்டு வழி வழியாக பின்பற்றப்படும் ஒரு சம்பிரதாயப்படி பாகற்காயை படைக்கின்றனர். இதனாலேயே இந்த மண்டபத்தை பாவக்காய் மண்டபம் என்று அழைக்கின்றனர்.

புனித நீராடிய பாகற்காய்


துக்காராம் ஒருமுறை தீர்த யாத்திரை சென்றவர்களிடம் ஒரு பாகற்காயை கொடுத்து அவர்கள் செல்லும் புனித தலங்களில் உள்ள திருக்குளங்களில் அந்த பாகற்காயை குளிப்பாட்டி எடுத்து வரும்படி கூறினார்.

அவர்களும் அவ்வாறே செய்து அந்த பாகற்காயை துக்காராமிடம் திருப்பி கொடுத்தனர். அதை வாங்கி சுவைத்து பார்த்த துக்காராம் புனித தீர்த்தங்களில் நீராடியும் இந்த பாகற்காயின் கசப்பு மாறவில்லையே என்று நொந்து கொண்டாராம்.

நீங்கள் எத்தனை கோயிலுக்கு சென்றாலும் உங்கள் அடிப்படை குணம் மாறாவிட்டால் அந்த புனித யாத்திரையால் எந்த பயனும் இல்லை என்பதை விளக்கும் அருமையான சம்பவம் இது.

பாகற்காய் மாலை


சனிக்கிழமை அன்று பதினேழு பாகற்காய்களை மாலையாக கட்டி அணிவித்தால் வீடு கட்டுவதில் உள்ள தடைகளை அகற்றும் பாகற்காய் சனீஸ்வரர் வன்னி வேடு அகத்தீஸ்வரர் ஆலயத்தில் அருள் புரிகிறார்.

Markandeya Pooja