பாஞ்சன்யம் ( சங்கு), சுதர்சனம் ( சக்கரம்), கௌமோதகீ ( கதை), சார்க்கம் ( வில்), நந்தகம் (கத்தி) ஆகியவை விஷ்ணுவின் ஐந்து ஆயுதங்கள்.
தோற்றம்
விஸ்வகர்மா சூரியனின் கடுமையான கதிர்வீச்சை குறைக்க ஒரு இயந்திரத்தை உருவாக்கினார். அதை இயக்கிய போது அதிலிருந்து சுதர்சனர் எனப்படும் இவர் 108 கூர்முனைகளை உடைய சக்கர வடிவில் தோன்றினார்.
இவ்வாறு இவர் தோன்றிய ஆனி மாதத்து சித்திரை நட்சத்திரத்தன்று ஆலயங்களில் சுதர்சன ஜெயந்தியாக கொண்டாடுகின்றனர்.
பெயர்கள்
சக்கர ராஜர், சக்கரத்தாழ்வார், ஹேதி ராஜன் (ஆயுதங்களின் அரசன்) நேமி, ரதாங்கம், திகிரி என இவரை பல பெயர்களால் பக்தர்கள் அழைக்கின்றனர்.
சுதர்சனம் என்ற சொல்லுக்கு நல்வழி காட்டுபவர் என்று பொருள்.
உருவ அமைப்பு
ஷடகோண பின்னணியில் பதினாறு கரங்களுடன் கோவில்களில் இவர் காட்சியளிப்பதை காணலாம்.
சங்கு, சக்கரம், வில், மழு, வாள், அம்பு, ஈட்டி, சூலம், பாசம், அங்குசம், கேடயம், கலப்பை, தண்டம், உலக்கை, அக்னி, கதை போன்ற ஆயுதங்களை ஏந்தியவராக இவரை காணலாம்.
சிறப்புகள்
முதலையை வெட்டி கஜேந்திரனை காத்ததும், அம்ரீஷன் மீது பூதத்தை ஏவிய துர்வாசரை துரத்தி புத்தி புகட்டியதும், பாரத போரில் ஜயத்ரதனை கொல்ல சூரியனை மறைந்ததும், சிசுபாலன் சிரத்தை கொய்ததும், தர்பை நுனியில் அமர்ந்து சுக்ராச்சாரியாரின் கண்ணை பிடுங்கியதும் இந்த சுதர்சன சக்கரமே.
அனந்தாழ்வார் எனப்படும் நாகம், கருடாழ்வார் எனப்படும் கருடன், சுதர்சனத்தாழ்வார் எனப்படும் சக்கரம் ஆகிய மூவரையும் நித்யசூரிகள் என்பார்கள். இவர்கள் மூவரும் பகவானை எப்போதும் பிரியாமல் இருக்கும் வரம் பெற்றவர்கள்.
வழிபடும் முறை
விஷ்ணுவின் ஐந்து ஆயுதங்களில் ஒன்றான இந்த சுதர்சனரை தெய்வமாக வழிபடும் முறை உள்ளது.
கோவில்களில் 16 வகை ஆயுதங்களுடன் காட்சி தரும் இவரை வீடுகளில் இயந்திர வடிவில் வணங்குகின்றனர்.
இவரது அருளை வேண்டி கோவில்களிலும் வீடுகளிலும் சுதர்சன ஹோமம் செய்வது வழக்கம்.
இவரது மூல மந்திரத்தை ஜெபிப்பதன் மூலமாகவும், இவரது காயத்ரி மந்திரத்தை ஜெபிப்பதன் மூலமாகவும் இவரது அருளை பெறலாம்.
மூல மந்திரம்
ஓம் க்லீம் சஹஸ்ரராய ஹூம் பட் ஸ்வாஹா
காயத்ரி
மஹா ஜ்வாலாய தீமஹி
தன்னோ சக்ர ப்ரசோதயாத்.
ஆயுதங்களுடன் காட்சி தரும் சக்கரத்தாழ்வாரை ஷோடசாயுத ஸ்தோத்திரம் கூறி வழிபட வேண்டும்.
கோயில்கள்
ஸ்ரீ ரங்கத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தனி சந்நிதி உள்ளது.
கும்பகோணத்தில் உள்ள சக்ரபாணி கோவிலிலும், பெரியாங்குப்பம் மலை கோவிலிலும் ஸ்ரீ நாராயணத்து காவு கோவிலிலும் சக்கரத்தாழ்வார் மூலவராக உள்ளார்.
No comments:
Post a Comment